வியாழன், 3 மே, 2012

Boss கள் பல விதம்! 10


அந்த பண்ணை மேலாளர் மேலதிகாரியின் பாராட்டை எதிபார்த்து
நெல் விளைச்சல் நன்றாக வந்திருக்கிறது என்றவுடன்,அந்த D.A.O
உடனே அப்படியா. சரி. அறுவடை முடிந்ததும், இரண்டு மூட்டை
பச்சரிசியும், ஒரு மூட்டை புழுங்கல் அரிசியும் வீட்டுக்கு அனுப்பும்.
என்று கூறிவிட்டு ஜீப்பி‌ல் ஏறி சென்று விட்டாராம்.

அதைக்கேட்டவுடன் மேலாளருக்கு என்ன செய்வதேன்றே புரியாமல்
ஜீப் போன திசையையே பார்த்துக்கொண்டு இருந்தாராம். அருகில்
இருந்த மேஸ்திரி என்ன சார். திகைத்து நின்றுவிட்டீர்கள். என்ன
விஷயம்?’ என்றதும் எப்படி D.A.O கேட்டவைகளை அனுப்புவது? அவைகளுக்கான செலவை எப்படி அவரிடம் கேட்பது?’ என்னாலும்
அந்த செலவை ஏற்க முடியாது.என்றாராம்.

அதற்கு அந்த மேஸ்திரி,’சார். நீங்கள் வேலைக்கு புதியவர் ஆதலால் உங்களுக்கு நடைமுறை தெரியவில்லை.இது வழக்கமான ஒன்றுதான். என்னிடம் விட்டுவிடுங்கள். நான் அவைகளை அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்.;என்றாராம்.

எப்படி?’ எனக் கேட்டதற்கு மேஸ்திரி,‘அறுவடையான நெல்லிலிருந்து
மூன்று மூட்டை நெல்லை எடுத்து வைத்துக்கொண்டு, மீதியை
விளைந்ததாக காண்பித்துவிடலாம்.ஒரு மூட்டை நெல்லை இங்கேயே ஆட்களை வைத்து வேகவைத்து, அருகில் உள்ள அரிசி ஆலையில் வேகவைத்த நெல்லையும், பச்சை நெல்லையும் அரைத்து அரிசியாக்கி
D.A.O வீட்டுக்கு அனுப்பிவிடலாம். என்றாராம்.

அதற்கு பண்ணை மேலாளர், ‘அவ்வாறு செய்வது தவறு இல்லையா? நாளைக்கு மகசூல் குறைந்தது பற்றி நானல்லவா பதில் சொல்லவேண்டியிருக்கும் என்றதற்கு.சார். நீங்கள் கவலைப்படாதீர்கள். எல்லோருக்கும் இது தெரியும்.எனவே எதுவும் D.A.O அலுவலகத்தில்
கேட்க மாட்டார்கள். என்றாராம்.

அதுபோல அறுவடை முடிந்ததும், நெல்லை பண்ணையிலேயே
வேக வைத்து அருகில் இருந்த அரிசி ஆலையில் அரைத்து
மூட்டைகளை வண்டியில் ஏற்றி D.A.O வீட்டுக்கு அனுப்ப அந்த
மேஸ்திரி உதவினாராம்.

நெல்லை வேகவைக்க கூலி, அதை அரைத்ததற்கான கட்டணம், வண்டிச்சத்தம் முதலிய செலவுகள் பண்ணை கணக்கில், வேறு செலவினங்களாக காட்டப்பட்டன என்பதை சொல்லவா வேண்டும்.

இப்போது புரிந்திருக்கும் ஏன் அரசுப் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று!

(இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் நடந்த ஒரு விவாதம் எனது
நினைவுக்கு வருகிறது.அறிஞர் அண்ணா அவர்கள் அறுபதுகளில்
மாநிலங்கள் அவை (ராஜ்ய சபா) உறுப்பினராக இருந்தபோது,அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த திரு சி.சுப்ரமணியம் அவர்களிடம் கேள்வி நேரத்தின் போது, ‘இராஜஸ்தானில் உள்ள மைய அரசின், சூரத்கர் பண்ணை நஷ்டத்தில் இயங்குகிறதா? என அண்ணா கேட்டதற்கு, அமைச்சர் சுப்ரமணியம் சொன்னாராம்.இல்லை.இல்லை.
அது இலாபத்தில் இயங்கவில்லை என்று!!)

நான் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள், எல்லா பண்ணையிலும் நடக்கிறது என்றோ, எல்லா மேலதிகாரிகளும் இவ்வாறுதான் இருக்கிறார்கள் என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் இவ்வாறுதான் இருக்கிறார்கள் என்று சொல்லவே இந்த நிகழ்வுகளை தந்துள்ளேன்.

அரசுப் பணியில் சேரும்போது எவருமே எந்த தவறும் செய்ய  விரும்பாதவர்களாகத்தான் இருப்பார்கள்.ஆனால் அவர்களது
BOSS களுக்குகட்டாய சேவை செய்ய உட்படுத்தப்படும்போது, 
அவர்களும் பிற்காலத்தில்தேனை எடுத்தவர் புறங்கையை நக்குவதைப்போல இந்த தவறைசெய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்
என நினைக்கின்றேன். 

நல்ல வேளை எனக்கு இந்த மாதிரி அனுபவம் நிகழுமுன்
பணியிலிருந்து விலகிவிட்டேன்.
.
அடுத்து நான் குறிப்பிட இருக்கும் Boss தேசிய விதைக்கழகத்தில்
தார்வாரில் பணிபுரிந்தபோது வட்டார மேலாளராக (Regional Manager) இருந்தவர்.

அவருடைய பெயரை அவசியம் குறிப்பிட விரும்புகிறேன்.
அவரது பெயர் திரு D.P.மோகன். பஞ்சாபைச் சேர்ந்த அவர்
ஒரு விசித்திரமானவர். ஆனால் நல்லவர்.

அவர் பற்றி அடுத்த பதிவில்

தொடரும் 

10 கருத்துகள்:

 1. அரசுப்பண்னைகளின் அவல நிலை பற்றி அழகாகச் சொல்லி விட்டீர்கள்.அடுத்த பாஸ் எப்படி?பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அடுத்த Boss வேறுபட்டவர் என்பதை அவரது பெயரை எழுதியதிலிருந்தே அறிந்திருப்பீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. Manipulation of records has been the bane of our system from time immemorial. The fact is bosses who make illegal gains manage to always evade the long arms of law and only the poor, lowly sub ordinates face the consequences Vasudevan

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. அருமையான பொஸ்கள்(தலைவர்கள்). தொடருங்கள் தொடருவேன். நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 8. //அரசுப் பணியில் சேரும்போது எவருமே எந்த தவறும் செய்ய விரும்பாதவர்களாகத்தான் இருப்பார்கள்.ஆனால் அவர்களது
  BOSS களுக்குகட்டாய ‘சேவை’ செய்ய உட்படுத்தப்படும்போது,
  அவர்களும் பிற்காலத்தில்‘தேனை எடுத்தவர் புறங்கையை நக்குவதைப்போல’ இந்த தவறைசெய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்
  என நினைக்கின்றேன்.//

  இதில் நினைக்க என்ன இருக்கிறது. 100% உண்மை ... அது மட்டுமே தான். தலைமை ஒழுங்காகவும் சரியாகவும் இல்லாவிட்டால், ஊழல் என்பது புற்றுநோய் போல Top to Bottom பரவி விடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சரியே.

   நீக்கு