வெள்ளி, 25 மே, 2012

Boss கள் பலவிதம்! 17


ஒரு நாள் காலை 9 மணிக்கு நான் அலுவலகத்தில் இருந்தபோது,
சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரும், அவரோடு ஒரு
இளைஞனும் எனது அறைக்கு வந்து வட்டார மேலாளரைப்
பார்க்கவேண்டும் என்றனர்.

என்ன விஷயம்?’என விசாரித்தபோது அவர்கள் ஆந்திராவிலிருந்து வருவதாகவும் அந்த இளைஞனரின் பெயர் ராஜா ராவ் என்றும்
உடன் வந்திருப்பவர் அவரது தந்தையென்றும், அவர் ஆந்திராவில் வட்டாட்சியராக (Tashildar) இருப்பதாகவும் சொன்னார்கள்.

திரு ராஜா ராவ் SPA ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு, எங்கள் (தார்வார்)
வட்டார அலுவலகத்தில் சேரச் சொல்லி பணி நியமன ஆணை
வந்ததால், பணியில் சேர வந்திருப்பதாகவும், அதனால் RM ஐ பார்க்கவிரும்புவதாகவும் கூறினார்கள்.

நான் வழக்கம்போல் RM ஐ உள் தொலைபேசியில் தொடர்புகொண்டு,
புதிதாய் ஒருவர் SPA ஆக சேர வந்திருக்கிறார். தங்களைப்பார்க்க அனுப்பட்டுமா?’ என்று கேட்டபோது, அவரை அழைத்துக்கொண்டு
வருமாறு என்னைப் பணித்தார்.

நான் திரு ராஜா ராவையும் அவரது தந்தையையும் அழைத்துக்
கொண்டு RM அறைக்கு சென்றேன். அப்போது அவர் அவர்கள்
இருவரையும் பார்த்துவிட்டு, என்னிடம்,’என்ன ஒருவர் தான்
SPA ஆக சேர வந்திருக்கிறார் என்றீர்கள். இருவர்
வந்திருக்கிறார்களே?’ எனக்கேட்டுவிட்டு, திரு ராஜா ராவின்
தந்தையிடம், ‘நீங்களுமா SPA ஆக சேர வந்திருக்கிறீர்கள்?’
எனக் கேட்டார்.

அவரது கேள்வியில் வியப்பு இருந்ததா அல்லது கேலி
இருந்ததா எனக்கு எனத்தெரியவில்லை.

உடனே அவர், ‘இல்லை.இல்லை.நான் இவருடைய தந்தை.
ஆந்திராவில் வட்டாட்சியராக இருக்கிறேன். எனது மகனைக்
இங்கு கொண்டு வந்து விட வந்திருக்கிறேன். என்றார்.

உடனே திரு மோகன் அவர்கள், திரு ராஜா ராவிடம் ‘ஏன்.உங்களால்
தனியாக இங்கு வரத் தெரியாதா?’ எனக் கேட்டுவிட்டு, ‘நல்லவேளை.
இப்போது வந்தீர்கள். இன்னும் சற்று பொறுத்து வந்திருந்தால்
என்னைப் பார்த்திருக்க இயலாது. நான் வெளியே பண்ணை 
ஆய்வுக்கு சென்றிருப்பேன்.’ எனக்கூறிவிட்டு, திரு ராஜாராவின்
தந்தையிடம் ‘சார். வந்ததுதான் வந்தீர்கள். நீங்களும் என்னோடு 
ஆய்வுக்கு வாருங்களேன்.வந்தால் உங்கள் மகனின் பணி 
எத்தகையது என நீங்கள் தெரிந்துகொண்ட மாதிரி இருக்கும்.’ 
என்றார்.


அவரும். சந்தோஷமாக,‘சரி. என்றதும், தனது ஜீப்பில் அவரையும்
திரு ராஜா ராவையும் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்.
கிளம்பும்போது ’ஹாவேரி (Haveri) வரை செல்வதாகக் கூறிவிட்டு
சென்றார்.

ஹாவேரி என்பது தார்வாரிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர்
தூரத்தில் இருந்ததால், பண்ணைகளைப் பார்வையிட்டு அவர்கள்
திரும்பி வர நேரமாகலாம் என நினைத்துக்கொண்டேன்.

நான் நினைத்தது போல் மதியம்  சுமார் 3 மணிக்குத்தான்
அவர்கள் திரும்பினார்கள்.திரு மோகன் அவர்கள் எப்போதும்
போல் உற்சாகமாகத்தான் இருந்தார். ஆனால் திரு ராஜா ராவும்
அவரின் தந்தையும், களைப்புடன் ஜீப்பில் இருந்து இறங்கி
நடக்கமுடியாமல் நடந்து வந்தனர். திரு ராஜா ராவின் தந்தையின்
முகமோ ஏன் இங்கு வந்து இவரிடம் மாட்டிக்கொண்டோம் 
எப்போது இங்கிருந்து தப்பிக்கலாம் என்பதுபோல் இருந்தது.

உள்ளே வந்ததும், திரு மோகன் அவர்கள் திரு மானே 
வைக் கூப்பிட்டு அருகில் இருந்த உணவகத்திலிருந்து மூவருக்கும்
மசாலா தோசை கொண்டுவர சொன்னார். (திரு மானே தார்வார் அலுவகத்தில் இருந்த ஊழியர்.இவர் தான் என்னை முதன் முதல் அலுவலகத்திற்கு அழைத்து சென்றவர்.)

அப்போதுதான் தெரிந்தது, காலையில் அலுவலகத்தில் இருந்து 
புறப்பட்டு ஹாவேரி போய் பண்ணைகளை ஆய்வு செய்து விட்டு திரும்பும் வரை அவர்கள் ஒன்றுமே சாப்பிடவில்லை என்று.
அந்த நேரத்தில் சாப்பாடு இருக்காது என்பதால்தான் தோசை 
கொண்டு வர சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் திரு மோகன், ராஜா ராவின் தந்தையிடம்
எப்படி இருந்தது இந்த ஆய்வுப்பயணம்? இதுபோல் பல நாட்கள் 
உங்கள் மகன் ஆய்வுக்காக பயணிக்க வேண்டி இருக்கும் அதுவும் 
அரசுப் பேருந்தில்! சில சமயம் இன்றுபோல் மதிய உணவை 
தியாகம் கூட செய்யவேண்டி இருக்கும். என்ன நீங்களும் உங்கள் மகனுக்கு துணையாக கூட இருக்க விரும்புகிறீர்களா?’ என்றார்.

அவர் உடனே,’இல்லை இல்லை. நான் இன்றிரவே ஊருக்கு
கிளம்புகிறேன். என் மகன் முதன்முதல் எங்கள் மாநிலத்தைவிட்டு வருகிறானே என்றுதான் நான் கூட வந்தேன். மற்றபடி இங்கேயே
இருக்க அல்ல. மேலும் நான் இரண்டு நாட்கள் விடுப்பில் தான் வந்திருக்கிறேன்.என்று சொன்னார்.

அவர் சொன்ன பதிலின்,வேகம், எங்கே மேலும் ஒரு நாள் இங்கு
இருந்தால் இவர் மறுபடியும் வேறு எங்காவது கூட்டிச் சென்று
பட்டினி போட்டுவிடுவாரோ என்னவோ அதற்குள் இங்கிருந்து கிளம்பிவிடலாம் என்பதுபோல் இருந்தது!

அதற்கு திரு மோகன் சொன்னார்.உங்கள் மகன் எந்த சூழ்நிலையில் பணிபுரியவேண்டி இருக்கும் என்பதை காண்பிப்பதற்காகவே
உங்களை என்னுடன் அழைத்து சென்றேன். அதனால் உங்களுக்கு
ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்.

மகனே ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நீங்கள் கூட செல்லலாம். படித்து முடித்த பின்னும் அவரை தனியாக
விடவில்லை என்றால் அவருக்கு தன்னம்பிக்கையும் தைரியமும்
எவ்வாறு வரும்? எவ்வளவு காலம் தான் நீங்கள் அவர் கூடவே இருக்கமுடியும்?

இங்கே உங்கள் மகனைப் போன்று நிறைய பேர் பல மாநிலங்களில்
இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் தனியாகத்தான் வந்தார்கள்.
எனவே தைரியமாகத் திரும்பிச் செல்லுங்கள் உங்கள் மகன்
எங்களுடன் சந்தோஷமாக இருப்பார்.என்று சொன்னார்.

அவரும் அவரிடம் சரி என சொல்லிவிட்டு கிளம்பும்போது என்னிடம் சொன்னார் இந்த மாதிரி மேலதிகாரியை இப்போதுதான் பார்க்கிறேன்.
நீங்களெல்லாம் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள்.என்று.

திரு மோகன் அவர்கள் எப்படி எங்களுடைய திறன் ஆய்வுக்
கூட்டத்தை (Review Meeting) நடத்தினார் என்பது அடுத்த பதிவில்.

தொடரும்

10 கருத்துகள்:

  1. சில நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள் இவரை போல ..!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகளின்’ வலைப்பதிவு நண்பருக்கு!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் மகன்
    எங்களுடன் சந்தோஷமாக இருப்பார்.’ // இதுவே போதுமே அவர் சிறந்தவர் என்பதை உணர்த்த தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி
    திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா27 மே, 2012 அன்று AM 9:54

    மேலாளரின் போக்கு கடுமையாக ஆனால் புத்திமதியாக இருந்தது. தொடருங்கள். கூட வருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. மிக வித்தியாசமான நகைச்சுவை உனர்வு மிக்க மனிதர்தான் உங்கள் பாஸ்

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. களப்பணிகளை நேரில் கூட்டிச்சென்று காட்டியதும், பிறகு காலை முதல் சாப்பிடாமல் சோர்வாக இருந்துள்ள அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுத்ததும், மகன் மேல் இன்னும் அக்கறை காட்டும் ஒரு தந்தை அவ்வாறெல்லாம் இனி இருக்கக்கூடாது என புத்திமதி கூறியுள்ளதும் அருமை.

    //இங்கே உங்கள் மகனைப் போன்று நிறைய பேர் பல மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் தனியாகத்தான் வந்தார்கள். எனவே தைரியமாகத் திரும்பிச் செல்லுங்கள் உங்கள் மகன் எங்களுடன் சந்தோஷமாக இருப்பார்.’ //

    மிகவும் ஆறுதல் அளிக்கும் சொற்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அவர் போன்ற மேலதிகாரிகள் மிக குறைவு என்றே எண்ணுகிறேன். இப்போது நினைத்தாலும் அவரோடு பணியாற்றியது பெருமையாய் இருக்கிறது.

      நீக்கு