திங்கள், 6 ஆகஸ்ட், 2012

Boss கள் பலவிதம்! 37


அனுபவம் ஒரு பாடம் என்பார்கள்.அது உண்மைதான். நான் பணி புரிந்தபோது எனக்கு Boss ஆக இருந்தவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம்.அவர்களுக்கு கீழே பணி 
ஆற்றியபோது ஒரு Boss எப்படி இருக்கவேண்டும் என்பதை விட, ஒரு Boss எப்படி இருக்கக்கூடாது என்பதையே  கற்றுக்கொண்டேன்.

எங்கள் வங்கியின் பயிற்சி கல்லூரியில் சொல்வார்கள். எதை கற்றுக்கொள்ளக்கூடாது என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.
என்று.

அந்த அறிவுரையை நான் முழுமையாக ஏற்றுக்கொண்டேன். நான் 
முதன் முதல் வங்கியில் கிளை மேலாளராக ஆனது 1983 மே மாதத்தில் தான்.அதிலிருந்து  21 ஆண்டுகள் நான் பலருக்கு Boss ஆக
இருந்திருக்கிறேன்.ஆனால்  Boss ஆக இல்லாமல், ஒரு மூத்த சக 
ஊழியர்போல, ஒரு நல்ல நண்பன் போலவே நடந்துகொண்டேன் என்பதைஎன்னுடன் பணியாற்றிய நண்பர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

மாநில அரசில் எனக்கு கிடைத்த அனுபவமும், வங்கியில் சேர்ந்தவுடன்
கிடைத்த அனுபவமும் ஒரு Boss எப்படி இருக்கக்கூடாது என்பதையும், தார்வாரில் திரு மோகன் அவர்கள் கீழ் பணியாற்றிய அனுபவத்தால் 
ஒரு Boss எப்படி இருக்கலாம்/இருக்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

நான் முதன்முதல் மன்னார்குடியில் மாவட்ட வேளாண் அலுவலரைப் பார்க்கப் போனபோது ஏற்பட்ட கசப்பான அனுபவம் அப்படியே மறையாமல் மனதில்  இருந்ததால், அது போன்ற நிகழ்வுகள் என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது, நான் பார்த்த தெய்வத்தாய் என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி அவர்களால்
எழுதப்பட்டு திரு T.M.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய

‘’பதவி வரும்போது பணிவு வரவேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா’’

என்ற வரிகள் என் மனதில் பசு மரத்தாணி போல் பதிந்து விட்டதால்,
பதவி வந்தபோது பணிவோடு  இருந்தேன் என்பதுதான்  உண்மை.

வங்கியில் முதன் முதல் மேலாளராக ஆன போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என எனக்கென்று நானே சில கொள்கைகளை ஏற்படுத்திக்கொண்டு அவைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.

நேரம் தவறாமை, முன் மாதிரியாக நடந்துகொள்ளுதல், நடு நிலைமையோடு இருத்தல்,சக ஊழியர்களை மதிப்போடு நடத்துதல், வங்கிக்கு விசுவாசமாய் இருப்பதோடு நேர்மையாய் இருத்தல், வெளிப்படையான செய்கைகள் போன்றவைகள்தான் அவைகள்.
அவைகளை நான் பணி ஓய்வு பெறும் வரை கடைப்பிடித்தேன் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளுவேன்..

வங்கியில் மேலாளாராகவும் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவிகளை 
வகித்தபோது என்னைப்பார்க்க வருகின்ற சக ஊழியர்களை எனது
முன்னால் உள்ள நாற்காலியில் அமர சொல்லிவிட்டு தான் அவர்களை 
மேலே பேச சொல்வேன்.

அதுவும் எனது கிளைக்கு மாற்றலாகி சேர வருபவர்களை முதலில்
உட்கார சொல்லி அவர்களுக்கு காஃபி வரவழைத்துக் கொடுத்து, அவர்களைப் பற்றி விசாரித்து,பின் சார்பு மேலாளரை (Sub Manager) அழைத்து அவர்களை கிளையில் உள்ள அனைவருக்கும் 
அறிமுகப்படுத்த சொல்வது என் வழக்கம்.இவ்வாறு செய்வது மூலம் அவர்களுக்கு  புதிய இடத்தில் ஏற்படும் தயக்கம் போகும் என்பது 
எனது கணிப்பு.

எங்கள் வங்கி கிளைகளில் ஒவ்வொரு ஊழியருக்குமான கோப்புகள்
(Staff Files) மேலாளர் வசம் தான் இருக்கும்.அதில் அந்த ஊழியர் 
சேர்ந்தது முதல் பணியாற்றிய கிளைகளில் அவருக்கு தரப்பட்ட கடிதங்களின் நகல்கள் அனைத்தும் கோர்த்து வைக்கப்பட்டிருக்கும்.

ஒருவேளை அவர் ஏதாவது தவறு செய்து அதற்காக அவரிடம் 
விளக்கம் கேட்டிருந்தாலோ அல்லது அவருக்கு குற்ற அறிக்கை 
(Charge Sheet) கொடுக்கப்பட்டு இருந்தாலோ விசாரணை நடத்தி பின் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தாலோ அந்த ஆவணங்கள் அனைத்தும் அவரது கோப்பில் இருக்கும். கிளைக்கு  மாற்றலாகி 
வரும் ஊழியர்களின் கோப்பு வந்தவுடன் சிலர் அதைப் புரட்டிப் பார்த்து அவர் மேல் ஏதேனும் குற்ற அறிக்கை(Charge Sheet) கொடுக்கப்பட்டு இருக்கிறதா எனப் பார்ப்பது வழக்கம்.

ஆனால் நான் ஒருபோதும் அந்த கோப்புகளின் உள்ளே சென்று படித்ததில்லை. ஒரு ஊழியர் தவறு செய்ததாக தண்டிக்கப்பட்டு 
இருந்தால் அதற்கு பல காரணங்கள்  இருக்கக்கூடும்.ஒருவேளை 
அவர் தவறாக தண்டிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது சூழ்நிலையின் காரணமாக  அவர் தவறு செய்து, அதனால் தண்டிக்கப்பட்டு பிறகு 
திருந்தி இருக்கலாம்.

எனவே அவைகளைப் படித்து அவர் எங்கோ எப்போதோ செய்த தவறுக்குக்காக, என் கீழ் பணியாற்றும் போதும் திரும்பவும் தவறு செய்யக்கூடியவர் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டால் அவரது செய்கைகள் யாவும் தவறாகவே தோன்றும் அது அவருக்கும் நல்லதல்ல, கிளையின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்பதால் நான் 
அந்த கோப்புகள் அஞ்சல் மூலம் வந்ததும் அப்படியே உள்ளே வைத்துவிடுவேன்.

எனது இந்த பழக்கத்தால் வங்கியால் தொல்லை கொடுப்பவர்கள்
(Trouble Makers) என கருதப்பட்டவர்கள் என்னிடம் வந்ததும்
Trouble Shooters கள் ஆனார்கள் என்பது உண்மை. இதனாலேயே எனது
வட்டார அலுவலகம் சிலரை எனது கிளைக்கு மாற்றிவிட்டு  என்னை தொலைபேசி மூலம் கூப்பிட்டு, உங்களிடம் வந்தால் இவர்
மாறிவிடுவார்  என்றே அனுப்பியிருக்கிறோம். என்று சொன்னதும்
உண்டு.

நான் கண்டிப்பாக இருந்திருக்கிறேன் ஆனால் அதே நேரம் கனிவாகவும் இருந்திருக்கிருக்கிறேன். என் கீழ் பணியாற்றியவர்களுக்காக எனக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் எடுத்து சொல்லி அவர்களுக்கு பதவி உயர்வு பெற்று தந்திருக்கிறேன்.


தொடரும்

33 கருத்துகள்:

 1. /// எதை கற்றுக்கொள்ளக்கூடாது என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். ///

  சத்தியமான வார்த்தைகள்...

  நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவோடு இருந்ததால், (புரட்சித்தலைவர் பாட்டை போல்) உங்களுக்கு கீழ் வேலை செய்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  பதிலளிநீக்கு
 2. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  பதிலளிநீக்கு
 4. குட்! ஒரு மேலதிகாரி எப்படி இருக்கக் கூடாது என்பதை உங்களின் அனுபவம் உணர்த்தியதால் தேவையான சமயங்களில் அதிகாரியாகவும் மற்ற நேரங்களில் நண்பனாகவும் நடந்து கொண்டதை உணர்ந்ததில் மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு. அனுபவத் துளிகள் ரசிக்க வைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா.நான் கடந்த சில வாரங்களாக தங்களின் வலைப் பதிவினை வாசித்து வருகிறேன்.மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று மனதிருப்தி அளிக்கக் கூடிய நல்ல வேலையில் இருக்கிறேன்.அதிகாரிகள் மட்டத்தில் நடக்கக் கூடிய நிகழ்வுகளை சொல்லி தெரியபடுத்தக் கூடிய அளவிற்கான தொடர்புகள் குறைவு என்பதை விட இல்லை என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.அக்குறையை போக்கி வருகிறீர்கள். நன்றி சொல்ல மாட்டேன்.நன்றியை எதிர்பார்த்து ஆசிரியர்கள் கற்று கொடுப்பதில்லையல்லவா.

  பதிலளிநீக்கு
 7. நான் கண்டிப்பாக இருந்திருக்கிறேன் ஆனால் அதே நேரம் கனிவாகவும் இருந்திருக்கிருக்கிறேன். என் கீழ் பணியாற்றியவர்களுக்காக எனக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் எடுத்து சொல்லி அவர்களுக்கு பதவி உயர்வு பெற்று தந்திருக்கிறேன்.

  சிறந்த பண்புகள் அதிகாரிகள் அனைவரும் இப்பண்புகளுடன் இருந்தால் நன்றாகவேயிருக்கும்.

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கு நன்றி திரு சேக்காளி அவர்களே!. மன திருப்தி அளிக்கக்கூடிய நல்ல வேளையில் இருக்கிறீர்கள் என்பதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது. எனது அனுபவத்தைத்தான் எழுகிறேனே தவிர எதையும் கற்றுக்கொடுக்க அல்ல. இருப்பினும் என்னை ஆசிரியர் நிலையில் வைத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. பாராட்டுக்கு நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே!

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

  பதிலளிநீக்கு
 11. உங்கள் பதிவு மேலும் பலரையும் முன் மாதிரியான பாஸா க நடக்கத் தூண்டும்.

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 14. நமக்கு கீழே பணியாற்றுபவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று புரிந்துகொண்டாலே போதும் எல்லோருக்கும் பிடித்த மனிதர்களாகிவிடலாம் நாம்!

  பதிலளிநீக்கு
 15. உண்மைதான் ‘வரலாற்று சுவடுகள்’ நண்பரே! நம்மோடு பணிபுரிவர்களின் உணர்வுகளை மதித்தாலே நாம் அனைவராலும் விரும்பப்படுவோம் என்பது உண்மை.

  பதிலளிநீக்கு
 16. ஒரு மேலாளராக எவர் வேண்டுமானாலும் வந்து விட முடியும்; ஒரு நல்ல மேலாளராக வர பயிற்சியும்,திறமையான அணுகுமுறையும்,தலைமைப் பண்புகளும்,உள்ளத்தால் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

  இவை அனைத்தையும் இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு அறிவன் அவர்களே

  பதிலளிநீக்கு
 18. Digging into the past of an employee and forming a jaundiced opinion is a favorite hobby of many ... Glad to know that you were different in your approach as otherwise this would have bred more discontent/distrust and spread disharmony.It was heartening to note that a wonderful song in movie released in 1962 (probably)guided your behavior after nearly 21 years, the year you became a boss . This coupled with other attributes were probably the factors that catapulted you to great heights in your profession. I would request you to narrate some specific instances that would help budding bosses . Vasudevan

  பதிலளிநீக்கு
 19. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! உங்களது வேண்டுகோளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. ‘எதை கற்றுக்கொள்ளக்கூடாது என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.’

  அனுபவ ஞானம் !!!

  பதிலளிநீக்கு
 21. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  பதிலளிநீக்கு
 22. எனக்குத் தெரியும் நீங்கள் சிறந்த தலைவராகவே இருப்பீர்கள் என்று.
  இதை வாசித்ததும் மகிழ்ச்சியே
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 23. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 24. 1983 முதல் தொடர்ந்து 21 ஆண்டுகள் BOSS என்ற பெயரில் ஒரு மூத்த சக ஊழியர்போல, ஒரு நல்ல நண்பன் போலவே நடந்துகொண்டுள்ள தங்களுக்கு என் வாழ்த்துகள்.

  அனைவரையுமே யோசிக்க வைக்கும் அந்தத் திரைப்படப் பாடல் வரிகள் மிகவும் அருமை.

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! கவிஞர் வாலி அவர்களின் பாடல்களிலேயே எனக்குப் பிடித்த பாடல் அது தான்.

   நீக்கு
 25. //வங்கியில் மேலாளாராகவும் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவிகளை வகித்தபோது என்னைப்பார்க்க வருகின்ற சக ஊழியர்களை எனது முன்னால் உள்ள நாற்காலியில் அமர சொல்லிவிட்டு தான் அவர்களை மேலே பேச சொல்வேன்.//

  அனைத்து அதிகாரிகளும் முதன் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய மிகச்சிறந்த பண்பு இது மட்டுமே.

  நமக்குக்கீழே பணியாற்றும் ஊழியர்களின் தயக்கத்தையும் பயத்தையும் முதலில் நாம் போக்கினால் தான், அவர்களுக்கும் ஓர் தன்னம்பிக்கை வரும். அதற்கான தங்களின் நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கது.

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 26. //ஒரு ஊழியர் தவறு செய்ததாக தண்டிக்கப்பட்டு இருந்தால் அதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். ஒருவேளை அவர் தவறாக தண்டிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது சூழ்நிலையின் காரணமாக அவர் தவறு செய்து, அதனால் தண்டிக்கப்பட்டு பிறகு திருந்தி இருக்கலாம்.

  எனவே அவைகளைப் படித்து அவர் எங்கோ எப்போதோ செய்த ‘தவறு’க்குக்காக, என் கீழ் பணியாற்றும் போதும் திரும்பவும் தவறு செய்யக்கூடியவர் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டால் அவரது செய்கைகள் யாவும் தவறாகவே தோன்றும் அது அவருக்கும் நல்லதல்ல, கிளையின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல //

  இதையெல்லாம் எவ்வளவு அதிகாரிகள் இவ்வாறு பாஸிடிவ் ஆக நினைத்துப்பார்த்து செயல் படுகிறார்கள் !

  சமயம் கிடைக்கும் போது பழி வாங்க மட்டுமே இவற்றையெல்லாம் பயன் படுத்திக்கொள்பவர்களே மிகவும் அதிகமாகும்.

  இதில் தாங்கள் சொல்வதும், தங்களின் மாறுபட்ட அணுகுமுறையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நான் இந்த அணுகுமுறையை தேர்ந்தெடுக்க காரணம் வங்கியில் சேர்ந்தபோது தகுதி காண் பருவத்தில் எனக்கு கிடைத்த அனுபவம் தான். அந்த மேலாளருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

   நீக்கு
 27. //எனது இந்த பழக்கத்தால் வங்கியால் தொல்லை கொடுப்பவர்கள்
  (Trouble Makers) என கருதப்பட்டவர்கள் என்னிடம் வந்ததும்
  Trouble Shooters கள் ஆனார்கள் என்பது உண்மை.//

  மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு