வியாழன், 9 ஆகஸ்ட், 2012

Boss கள் பலவிதம்! 38


நான் Boss ஆக இருந்தபோது, சென்ற பதிவில் சொன்னது போல் நானே வகுத்துக்கொண்ட சில கொள்கைகளை கடைப்பிடித்ததால் என்னால் சுலபமாக என்னோடு பணியாற்றிவர்களை அரவணைத்து செல்ல முடிந்தது.
 
திருச்சி புனித வளவனார் கல்லூரி (St.Joseph’s College)யில்  கற்றுக்கொண்ட  நேரம் தவறாமையை கடைசி வரை கடைப்பிடித்தேன்.(ஏன் இன்று வரையும் கடைப்பிடித்து வருகிறேன்.)

வங்கியில் பணியாற்றியபொழுது (1970 ஜனவரி முதல் 2004 ஜூலை 
வரை) வங்கிக்கு பணிக்கு காலையில் மற்ற ஊழியர்கள் வருமுன் 
ஒரு மணி நேரம் முன்னரே செல்லும் வழக்கத்தைக்கொண்டு 
இருந்தேன்.

Practice what you preach என்ற சொற்றொடருக்கொப்ப 
நடந்துகொண்டதால் மேலாளராக இருக்கும்போது நேரம் கழித்து பணிக்கும் வரும் ஊழியர்களை சரியான நேரத்திற்கு பணிக்கு 
வாருங்கள் என்று என்னால் சொல்ல முடிந்தது.

ஒரு தடவை நான் பணியாற்றிய கிளையில் இருந்த ஊழியர்
ஒருவர் தினம் 10  அல்லது 15 மணித்துளிகள் கழித்தே வேலைக்கு
வந்து கொண்டு. இருந்தார். கூப்பிட்டு என்ன காரணம் தினம் நேரம் கழித்தே வருக்கிறீகள்?’ எனக் கேட்டதற்கு நான் யார் என்று 
தெரிந்தும் என்னை கேட்கிறீர்களா?’ என்றார்.

நான் சொன்னேன். நீங்கள் யாராயிருந்தாலும் இங்கே எல்லோரையும்போல் ஒரு ஊழியர் தான். எனவே நீங்களும் 
நேரத்திற்கு வரவேண்டும். இல்லாவிடில் நான் உங்களுக்கு வருகைப்பதிவேட்டில் வருகை தராதவர் (Absentee) என்று எழுதி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். எனக் கண்டிப்போடு 
சொன்னேன். அதிலிருந்து அவர் ஒழுங்காக வர ஆரம்பித்தார்.

அதுபோல் இன்னொரு கிளையில் ஒரு பெண் ஊழியர் தினம் 
நேரம் கழித்தே வந்து, சரியான நேரத்திற்கு வரமுடியாததற்கு,

‘’பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;’’ 

என்று பாரதியார் பாடியதுபோல,ஏதேனும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
 
அவரிடம் பலமுறை சொல்லியும் அவர் நேரத்திற்கு பணிக்கு 
வருவதாக இல்லை. நேரம் கழித்து ஒரு நாள் வந்தபோது,பொறுமை இழந்து  அவரிடம்,’ நீங்கள் இன்று வீட்டுக்கு போகலாம். உங்களுக்கு விடுப்பு என வருகைப் பதிவேட்டில் எழுதிவிட்டேன். என்றேன்.

அவர் உடனே நேரே அவர் சார்ந்திருந்த சங்க அலுவலகத்திற்கு 
சென்று அது பற்றி முறையிட்டு இருக்கிறார்.அவர்கள் சொன்னார்களாம். சபாபதி நேரத்திற்கு கிளைக்கு வருபவர். அவர் உங்களை நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும் என சொன்னது சரியே. எனவே நீங்கள்தான் சரியான நேரத்திற்கு கிளைக்கு செல்லவேண்டும். இதில் நாங்கள் 
ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். 
என சொல்லிவிட்டார்களாம். 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு நாள் கூட நேரம் கழித்து வேலைக்கு செல்லாததால் தான் என்னுடன் பணியாற்றுபவர்கள் நேரத்திற்கு வராதபோது அதுபற்றி  என்னால் கேட்கமுடிந்தது என்பதற்காகத்தான்.  

என்னுடன் பணியாற்றியவர்களை என்றுமே நான் விட்டுக் கொடுத்ததில்லை.

நம்முடைய மேலாளர் நமக்கு பக்க பலமாக இருப்பார் என்ற 
எண்ணம் இருந்தால்தான் அவர்களால் நிம்மதியோடு பணியாற்றமுடியும் என்பதை உணர்ந்ததால், அவர்கள் பணிச்சுமை காரணமாக செய்கின்ற தவறுகளுக்காக தண்டனை வாங்கித்தராமல், அந்த தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவி செய்து இருக்கிறேன்.

ஒரு மாவட்டத் தலைநகர் கிளையில் மேலாளராக இருந்தபோது 
ஒரு நாள் வங்கிகளுக்கிடையே காசோலை பரிமாற்றும் இடம் 
(Clearing House) மூலம் எங்களது வாடிக்கையாளர் கொடுத்திருந்த 
அவரது மிகைப்பற்று (Overdraft) கணக்கிற்கான காசோலை வந்தது.

அவரது கணக்கில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவான தொகையை அவர் எடுத்துவிட்டதால், அந்த காசோலையை பற்றுப்பதிவு (Debit) 
செய்ய முடியாது என்பதால் அவருக்கு என் உதவி மேலாளர் 
தொலைபேசி மூலம் கூப்பிட்டு அந்த காசோலைக்கான பணத்தைக் 
கட்ட சொல்லி இருக்கிறார்.

அவர் வராமல், அவரது மேலாளரை அனுப்பி  உதவி மேலாளரிடம் இன்று இதை Pass செய்து விடுங்கள். நாளை வந்து பணத்தைக் கட்டிவிடுகிறோம். என சொல்ல சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் எங்கள் மேலாளர் அனுமதி இல்லாமல் இதை Pass செய்ய முடியாது. எனவே அவரிடம் அனுமதி பெற்று வாருங்கள். என்று சொல்லிவிட்டார். 

அந்த வாடிக்கையாளரின் மேலாளர் என்னிடம் வந்துஇன்று ஒரு நாள் மட்டும் அனுமதியுங்கள். நாளை கட்டிவிடுகிறோம். என்றார். நான் தொகை எவ்வளவு?’  என்றதற்கு ரூபாய் 25000 என்றதும், நானும் 
சரி என சொல்லிவிட்டு உள் தொலைபேசி மூலம் அந்த உதவி மேலாளரை கூப்பிட்டு இந்த தடவை மட்டும் அனுமதியுங்கள். எனக்கூறிவிட்டேன்.

(வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இதுபோல் மேல்பற்று 
(Overdrawal) தருவது வழக்கம்தான். ஆனால் அவைகள் பற்றி 
வட்டார அலுவலகத்திற்கு எழுதி ஒப்புதல் வாங்கிக்கொள்ளவேண்டும்.)

அன்று மதியம் அந்த உதவி மேலாளர் அந்த காசோலையை எடுத்துக்கொண்டு என்னிடம் கையெழுத்து வாங்க வந்தார். ஆனால் 
ஒரு காசோலை அல்ல. இரண்டு காசோலைகள்! இரண்டிலும் 
அதே  அளவு தொகை.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், ‘என்ன இது. நான் ஒரு காசோலைத்தானே அனுமதிக்க சொன்னேன். என்றதும்  
உதவி மேலாளர் பதறிப்போய் சார். அவரிடம் இரண்டு காசோலைகளுக்குத்தான் உங்களிடம் அனுமதி வாங்கி வர சொன்னேன்.  அவர் வந்து உங்களிடம் இரண்டு என்று சொல்லாமல் ஒரு காசோலை என்று சொல்லிவிட்டிருக்கிறார் போல. நீங்கள் தொலைபேசியில் 
Pass செய்யலாம் என்றதும் இரண்டையும் Pass செய்துவிட்டேன். 
நானே நேரில் வந்து இரண்டு காசோலை என்று
சொல்லியிருக்கவேண்டும். அது என் தவறுதான். என்றார்.

உடனே அந்த வாடிக்கையாளரை தொலை பேசியில் அழைத்து
என்ன உங்கள் அலுவலர் இவ்வாறு நடந்துகொண்டு இருக்கிறார். இனி இது போன்ற சலுகைகளை எதிர்பார்க்காதீர்கள். நாளை வந்து இரண்டு காசோலைகளுக்கான பணத்தைக் கட்டுங்கள். எனக் கண்டிப்போடு  கூறிவிட்டு,என் உதவி மேலாளரிடம், ‘கவலை வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். என கூறி கையொப்பமிட்டேன்.

அவருக்கு முகத்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அன்று மட்டும் நான் கையொப்பமிடாமல்  விட்டிருந்தால் அந்த உதவி மேலாளர்
அதற்குப்பிறகு Counter ல் தைரியமாக செயல்பட்டிருக்கமாட்டார் 
என்பது உறுதி. 

(இப்போது அவர் ஒரு மாவட்ட கிளையின் மேலாளராக இருக்கிறார் 
என அறிந்து மகிழ்ச்சியே.)

தொடரும்

19 கருத்துகள்:

  1. நம்முடைய மேலாளர் நமக்கு பக்க பலமாக இருப்பார் என்ற
    எண்ணம் இருந்தால்தான் அவர்களால் நிம்மதியோடு பணியாற்றமுடியும்

    அருமையான பயனுள்ள பகிர்வுகள்,, பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. உங்களின் கண்டிப்பு பல பேரை நல்வழிக்கு மாற்றி இருக்கிறது...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜேஸ்வரி ஜகமணி அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. ஒரு சிறந்த மேலாலருக்கான அனைத்து குணங்களும் தங்களிடத்தில் ஒருமித்து வாழ்கின்றது! வாழ்த்துக்கள் சார்! நானும் நிறைய தெரிந்துகொண்டு வருகிறேன்! எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்ககூடாது என்று! தொடருங்கள் தொடர்வேன்! :)

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி 'வரலாற்று சுவடுகள்’ நண்பரே!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ நண்பரே!

    பதிலளிநீக்கு
  8. மிகஅருமை. அன்று அவர் மனதிற்குள் எத்தகைய பரபரப்பையும் பதட்டத்தையும் நீங்கள் காப்பாற்றியதில் நிம்மதியையும் அனுபவித்திருப்பார் என்பதை உணர முடிகிறது. இன்று அவர் ஒரு நல்ல மேலாளராக செயல்பட்டுக் கொண்டிருப்பார் என்றால் அதற்கு நீங்களல்லவோ காரணமாக இருக்கிறீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தங்களுக்கு. (உங்களைக் காண ஆகஸ்ட்26 ஐ ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  9. உங்களிடம் பணியாற்றியவர்கள் நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும்,பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! நானும் ஆகஸ்ட் 28 ஐ ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் உங்களைக் காண!

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. மிகச் சிறப்பான பதிவு.
    ஆம் நாம் உதாரணமாக இருக்க வேண்டும்.
    இப்படிதான் எனது கணவரும் இருந்தார்.
    நல்ல பெயர் எடுத்தார்.
    நல்வாழ்த்து சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! தங்கள் கணவரும் நற்பெயர் ஈட்டியது அறிந்து மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. //திருச்சி புனித வளவனார் கல்லூரி (St.Joseph’s College)யில் கற்றுக்கொண்ட நேரம் தவறாமையை கடைசி வரை கடைப்பிடித்தேன்.//

    திருச்சிக்காரனாகிய எனக்கு இதைக்கேட்க மிகவும் பெருமையாக உள்ளது. நம் முன்னால் குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள் படித்த கல்லூரியாச்சே ! :)

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! திருச்சியில் புனித வளவனார் கல்லூரியில் கற்றுக்கொண்ட நேரம் தவறாமையை இன்னும் இந்த வயதிலும் கடைபிடிக்கிறேன்.

      நீக்கு
  15. //Practice what you preach என்ற சொற்றொடருக்கொப்ப
    நடந்துகொண்டதால் மேலாளராக இருக்கும்போது நேரம் கழித்து பணிக்கும் வரும் ஊழியர்களை சரியான நேரத்திற்கு பணிக்கு
    வாருங்கள் என்று என்னால் சொல்ல முடிந்தது.//

    மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். நாம் நம் செயல்களில் பிறருக்கு முன்னோடியாக இருந்தால் மட்டுமே, பிறரையும் நம்மால் ஒழுங்குக்குக் கொண்டுவர முடியும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  16. //நம்முடைய மேலாளர் நமக்கு பக்க பலமாக இருப்பார் என்ற
    எண்ணம் இருந்தால்தான் அவர்களால் நிம்மதியோடு பணியாற்றமுடியும் என்பதை உணர்ந்ததால், அவர்கள் பணிச்சுமை காரணமாக செய்கின்ற தவறுகளுக்காக தண்டனை வாங்கித்தராமல், அந்த தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவி செய்து இருக்கிறேன்.//

    இதைப்படித்ததும் 1983 முதல் 1995 வரை எனக்கு மிக நல்ல BOSS ஆக இருந்த Mr. KMB (K.M. Balasubramanian - இன்னும் திருச்சி உறையூரில் இருக்கிறார். இப்போது அவருக்கு வயது : 80+) அவர்களை நான் இப்போது நினைத்துக்கொண்டேன்.

    தன் கீழேயுள்ள யார் எந்தத் தவறு செய்திருந்தாலும், அதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, அதைத் தான் செய்ததாகவே மேலிடத்தில் தைர்யமாகச் சொல்லுவார். யாரையும் எதற்கும் மேலிடத்தில் காட்டிக்கொடுத்து தண்டனை பெற்றுத்தர மாட்டார்.

    நன்கு வேலைசெய்து, சாதிப்பவர்களைப் பற்றி புகழ்ந்து மேலிடத்தில் சொல்லி APPRECIATION LETTERS & AWARDS FROM HOD வாங்கித்தருவார்.

    அவர் M.A., B.Com., L.L.B., படித்தவர். சட்டங்கள் + சட்டங்களில் உள்ள ஓட்டைகள் தெரிந்தவர்.

    தனக்கு சம்பந்தமே இல்லாத மற்ற துறை ஊழியர்களுக்கு, நிர்வாகத்தால் ஏதேனும் CHARGE SHEET கொடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான பதில் அளிக்க இவரையே அவர்கள் அணுகி, இவரின் உதவியை நாடுவார்கள்.

    இவரும் அவர்களுக்கு நல்லமுறையில் பதில் எழுதிக்கொடுத்து உதவி செய்வார். CHARGE SHEET எழுதியுள்ளவற்றிற்கு மட்டும் CAREFUL ஆக பதில் அளிக்க வேண்டும். விசாரணைக் COMMITTEE யால் நேரில் ENQUIRY நடக்கும் போதும் தேவையில்லாமல் வேறு ஏதும் உளறக்கூடாது என்று ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து உதவுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தங்களுடைய Boss திரு K.M. பாலசுப்ரமணியம் அவர்களின் பிறர்க்கு உதவும் குணம் பற்றி நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு