வியாழன், 3 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 22எனது அறைக்கதவை திறந்து உள்ளே வரலாமா?’எனக் 
கேட்டபடி  நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளரைப் 
பார்த்து வாருங்கள் திரு கிருஷ்ண வாரியர் அவர்களே?’ 
என்றதும் அப்படியே அசந்து நின்றவர், பின் உள்ளே 
வந்தார். 

உள்ளே வந்து அமர்ந்ததும் ஆச்சரியத்தோடு எப்படி 
என் பெயரை நினைவில் வைத்திருக்கிறீர்கள்?’ என்றார். 

ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?’ என்றதற்கு, நான் இரண்டு 
ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தியா வந்து வெளி நாடு 
சென்றுவிட்டு இன்றுதான் வருகிறேன். அப்போது 
வந்தபோது,என்னை உங்கள் மேலாளர் 
உங்களிடம் அறிமுகப்படுத்தியபோது, உங்களோடு 
நான் பேசியது சில மணித்துளிகள் மட்டுமே. 

அதுவும் நீங்கள் வேறு மாநிலத்தவர் என்பதால், 
எனது பெயர் உங்களுக்கு பரிச்சயமாக இருக்க 
வாய்ப்பில்லை. அப்படி இருந்தும், சில மணித்துளிகள் 
மட்டுமே உரையாடிய என்னுடைய பெயரை இரண்டு 
ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் 
வைத்திருக்கிறீர்களே அது எப்படி என்பதுதான் 
எனக்குப் புரியவில்லை. அதுதான் எனக்கு வியப்பாய் 
இருக்கிறது. என்றார் அவர்
.
நான் சொன்னேன் சார். நீங்கள் சொல்வது உண்மைதான்.
நான் தினம் பல்வேறு வாடிக்கையாளர்களை சந்திக்கிறேன். 
ஆனாலும் நான் இங்குள்ள வாடிக்கையாளர்களை 
தினம் தினம் பார்ப்பதால், அவர்கள் பெயரை 
மறக்க வாய்ப்பில்லை. 
  
ஆனால் உங்களைப்போன்ற வெளிநாட்டில் வாழும் 
இந்தியர்கள் சில நாட்களே வந்து போகும்போது 
என்னை சந்தித்து செல்கிறார்கள். அவர்கள் பெயரை 
கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 
அவசியம் எனக்கு உண்டு என்பதை நான் அறிவேன். 

ஏனெனில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப வர 
ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை அவர்களுக்கும் 
வங்கிக்கும் உள்ள தொடர்பு அஞ்சல் வழி மட்டுமே. 
அவர்கள் வங்கியை நம்பி அனுப்புகின்ற பணம் அவர்கள் 
கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என்பதை 
அவர்களுக்கு அஞ்சல் மூலம் அவர்களது காசோலை 
கிடைத்த அன்றே தெரிவிக்க ஏற்பாடு செய்தால்தான் 
அவர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள் 
என்பதும், தொடர்ந்து எங்கள் வங்கிக்கு ஆதரவு 
தருவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

ஆதலால் ஒவ்வொரு வாடிக்கையாளர் பெயரையும் 
நினைவில் வைத்துக்கொள்ள ஒரு முறையைக் 
கடைப்பிடிக்கிறேன். அப்போதுதான் அவர்களுக்கு 
நல்ல சேவையைக் கொடுக்கமுடியும் என நம்புகிறேன். 
அதனால்தான் உங்களைப் பார்த்ததும் உங்கள் 
பெயரை சொல்லி வரவேற்றேன். என்றேன்.

அதெல்லாம் சரி. அந்த முறை என்னவென்று 
சொல்லமுடியுமா?’ என்றார் அவர். 

அதற்கு நான் ஒரு பெயரையோ அல்லது ஒரு 
இடத்தையோ அல்லது ஓரு நிகழ்வையோ 
நினைவில் இருத்த அதோடு தொடர்புடைய 
வேறொன்றை இணைத்து நினைத்துக் கொண்டால் 

நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் 
அதை சொல்கிறேன்.உங்கள் நிறமே உங்கள் பெயரை
நினைவில் வைத்துக்கொள்ள உதவியது என்பதுதான் 
உண்மை. நீங்கள் கறுப்பாக இருந்ததால் கிருஷ்ணன்
என்ற உங்கள் பெயரை அந்த நிறத்தோடு 
சம்பந்தப்படுத்தி நினைவில் இருத்திக்கொண்டேன். 

மேலும் உங்களது துணைப்பெயர் (Surname) வாரியர் என்றதும், 
உங்களது தோற்றத்தையும், உடல் அமைப்பையும் 
பார்க்கும்போது ஒரு Warrior போன்று இருந்ததால் 
அதை வாரியரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். 
அதனால்தான் உங்களைப் பார்த்ததும் முழுப்பெயரையும் 
சொல்லி அழைத்தேன். என்றேன்.

உடனே அவர் கடகட’ வென சிரித்துக்கொண்டு 
இப்படியும் நினைவில் வைத்துக் கொள்ளமுடியும் என 
நான் நினைக்கவில்லை. என்றார்.

நல்லவேளை அவர் தப்பாக நினைக்கவில்லையே   
என எண்ணிக்கொண்டு, நலந்தானே? எப்போது இந்தியா 
வந்தீர்கள்? என்னால் ஏதேனும் ஆகவேண்டியுள்ளதா?’ 
என்றேன்.

அவர் நேற்றுதான் வந்தேன். உண்மையில் உங்கள் 
வங்கியில் எல்லா NRE வைப்புக்களையும் எனது 
நண்பரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது வங்கிக்கு
மாற்ற எண்ணி இங்கு வந்தேன்.

வெளியே Counter ல் இது பற்றி பேசியபோது தங்களைப் 
பார்க்க சொன்னார்கள். ஆனால் தங்களைப் பார்த்து 
பேசியவுடன் எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். 

நீங்கள் வாடிக்கையாளர்களை நினைவில் 
வைத்துக்கொள்ள கடைபிடிக்கின்ற அணுகுமுறையைப் 
பார்த்ததும், நம்மை நினைத்துக்கொண்டு நமக்காக 
சேவை செய்கின்ற வங்கியை விட்டு நாம் ஏன் 
போகவேண்டும் என்பதால் இப்போது இருக்கின்ற 
வைப்புக்களோடு இப்போது நான் கொண்டு
வந்திருக்கின்ற காசோலையும் இங்கேயே கொடுத்து 
வைப்பாக வைக்க விரும்புகிறேன். என்றார். 

எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா?

பி.கு. நான் பணி புரிந்த கிளையில் என்னோடு பணியாற்றிய ஒரே துணைப்பெயர் கொண்ட நண்பர்களின் பெயர்களை எப்படி நினைவில் இருத்திக்கொண்டேன் என்பதை பற்றி  பின் எழுதுவேன்.

தொடரும்

16 கருத்துகள்:

 1. உருவத்தோற்றத்தை வைத்தே பெயரை நினைவில் வைத்திருப்பது என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன். சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!

   நீக்கு
 4. நீங்கள் வாடிக்கையாளர்களை நினைவில்
  வைத்துக்கொள்ள கடைபிடிக்கின்ற அணுகுமுறையைப்
  பார்த்ததும், வியப்பாக இருக்கிறது .. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 5. நினைவில் கொள்ள நல்ல வழிமுறை சொல்லியிருக்கிறீர்கள் ஐயா!
  அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

   நீக்கு
 6. வாடிக்கையாளர்களும் நானும் 21 & 22 இரண்டு கட்டுரைகளையும் மற்றும் மூங்கில், கொத்தவரை பற்றிய கட்டுரைகளையும் இப்பொழுதுதான் படிக்க முடிந்தது. அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே

   நீக்கு
 7. தங்களின் நினைவுத் திறன் போற்றத்தக்கது! அனைவரும் பின்பற்றத்தக்கது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி புலவர் அய்யா அவர்களே!

   நீக்கு
 8. அன்பின் நடன சபாபதி - வாடிக்கையாளர்களைக் கவரும் செயல் நன்று. வங்கியில் மேலாளராக இருப்பவர்கள் வாடிக்கையாளர்களைச் சரிவரப் புரிந்து கொண்டு - அவர்கள் மகிழும் படியாக்ச் செயல்கள் புரிவதால் வங்கி வளரும். தாங்களின் திறமை பாராட்டத் தக்கது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு