சனி, 7 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 28


மேலாளர் நிமிர்ந்து பார்த்து யெஸ் என்றதும், நான், ‘சார். ஒரு
முக்கியமான விஷயம். இன்று பம்ப் செட் கடன் பெற்ற ஒருவரை சந்தித்தபோது அவர்  ஒரு அதிர்ச்சியான செய்தியை என்னிடம் சொன்னார்.

அவரிடமும், நம்மிடம் பம்ப் செட் கடன் பெற்ற மற்றவர்களிடமும் பம்ப் செட் விற்ற அந்த கடைக்காரர் வங்கி அலுவலர்கள் ஆய்வுக்கு சென்று வர ஆகும் டாக்ஸி செலவுக்கு என சொல்லி கூடுதலாக ரூபாய் 100 வசூலித்துவிட்டாராம்.

நம்முடைய வங்கியின் பெயரில் அவர் எப்படி அதை வசூலிக்கலாம் என நான் இன்று அவரது கடைக்கு சென்று நேரடியாக கேட்டதற்கு, அவர் அதை மறுத்ததோடு அதைப்பற்றி என்னிடம் பேச விரும்பாமல் உங்கள் மேனேஜரிடம் போய் என்னைப்பற்றி விசாரித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

நீங்கள் இது பற்றி விசாரித்து அவர் முறைகேடாக வசூலித்த அந்த பணத்தை திரும்பத் தர சொல்லவேண்டும் சார். என்றேன்.

நான் இவ்வாறு சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை போலும்.உடனே அவர் கோபத்தோடு,‘என்ன நீங்கள். யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு அவரிடம் போய் விசாரித்திருக்கிறீர்கள்.அவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?அவர் இங்கே பல வருடங்களாக நாணயமாக கடை நடத்தி வருபவர்.அவர் இப்படியெல்லாம்  செய்யக்கூடியவர் அல்லர்.

அவரிடம் பேசுமுன், நீங்கள் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கவேண்டும்.என்னைக் கேட்காமல் நீங்கள் ஏன் இப்படி அதிகப் பிரசங்கித்தனமாக நடந்துகொண்டீர்கள்? இனி இது போன்ற செயல்களை செய்யாதீர்கள். உங்கள் வேலை எதுவோ அதை மட்டும் செய்யுங்கள்.போங்கள். என்றார்.

சார். இவர் எப்படி என்று  எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த பயானாளி பொய் சொல்லவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்.ஏனென்றால் நான் நடந்து செல்வதைப் பார்த்துவிட்டு ;நீங்கள். ஏன் நடந்து வருகிறீர்கள். நான்தான் நீங்கள் டாக்ஸியில் வர அந்த கடைக்காரரிடம் ரூபாய் 100 கொடுத்திருக்கிறேனே என்று தானாகவே நான் கேட்காமலேயே சொன்னார். எனக்கென்னவோ இந்த கடைக்காரர் நமது வங்கிப் பெயரை சொல்லி பணம்
வாங்கியிருப்பதாகவே படுகிறது.எதற்கும் நீங்கள் அவரிடம் இது பற்றி விசாரியுங்கள் சார். என்றேன்.

உடனே அவரது முகம் ஜிவு ஜிவுஎன சிவந்துவிட்டது. என்ன நான் சொல்கிறேன் அவர் அப்படி செய்யக்கூடியவர் அல்ல என்று. நீங்கள் திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறீகள். உங்களுக்கு அனுபவம் பத்தாது. ஆயிரம் பேர் ஆயிரம்  சொல்வார்கள்.அதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாம் அவரை சந்தேகிக்க முடியாது.என்று கூறிவிட்டு கோப்புக்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

நான் போகலாம் என்பதற்கு அது சைகை என்பதால், மேலே எதுவும்
பேசாமல் வெளியே வந்துவிட்டேன்.

அறைக்கு வந்ததும் அதைப் பற்றி யோசித்தேன்.கடைக்காரர்தான் நான் விசாரித்தபோது மேற்கொண்டு விவரம் கேட்காமல் மறுத்தார் என்றால் மேலாளரும் ஏன் அதைப்பற்றி விசாரிக்கத் தயங்குகிறார் என்று.

அப்புறம் தான்  கேள்விப்பட்டேன்.நான் அந்த கடையை விட்டு வெளியே வந்து வங்கிக்கு வருவதற்குள்,கடைக்காரர் மேலாளரிடம் தொலைபேசி மூலம் நான் வந்து விசாரித்ததை சொல்லிவிட்டாரேன்று!

எனக்கென்னவோ மேலாளர் அந்த கடைக்காரரை ஆதரிப்பதாகவே தோன்றியது. எனவே அந்த விஷயத்தை நான் அப்படியே விட்டுவிட விரும்பவில்லை

வங்கியில் சேர்ந்தவுடன் பயிற்சியின் போது தலைமை அலுவகத்தில் எங்களுக்கு பயிற்சி அளித்த திரு Haribal அவர்கள் சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் சேர்ந்துள்ள நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. பணிக்காலத்தில் வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விசுவாசமாய்
இருங்கள்.தவறும் ஏதும் செய்யாதீர்கள்.வேறு யாராவது தவறு செய்வது உங்களது கவனத்திற்கு வந்தால் உடனே கிளை மேலாளரிடம் அதை தெரியப்படுத்துங்கள்.அப்படி அவர்  எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையென்றால் எங்களுக்கு (தலைமை அலுவலகத்திற்கு) எழுதுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

திரு Haribal அவர்கள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு 
அன்று நடந்ததை அப்படியே தலைமை அலுவகத்திற்கு தெரியப்படுத்த எண்ணினேன்.

கடைக்காரர் தவறு செய்தாரா என்று விசாரிக்கக்கூட மேலாளர் விரும்பாத நிலையில், தலைமை அலுவகத்திற்கு தெரிவிப்பது ஒன்று தான் வழி என நினைத்து உடனே ஒரு தாளில் அன்று நடந்ததை விரிவாக எழுதினேன்.

கடைசியில் முத்தாய்ப்பாக, இந்த விஷயத்தில் மேலாளர் ஏனோ சில பல காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார் என எழுதி அதை அடிக்கோடிட்டேன்.அந்த கடிதத்தில் நான்  எழுதிய அந்த வரிகள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ‘Our Manager is reluctant to take action in this regard
for the reasons best known to him!’ என்பதுதான் அது.

அதை  யாருக்கு அனுப்பலாம் என நினைத்தபோது,வங்கியின் தலைவருக்கு (அப்போது அவர் Custodian என அழைக்கப்பட்டார்.) அனுப்பினால் அவர் படிப்பாரோ இல்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால், அந்த விஷயம் வேளாண் நிதித்துறை சம்பந்தப்பட்டதால் அந்த துறை தலைவருக்கே அனுப்பலாம் என்று எண்ணி அந்த 
கடிதத்தை அவரது பெயருக்கு அனுப்பிவிட்டேன்.

நான் அவ்வாறு எழுதியது பற்றி யாரிடமும் சொல்லவில்லை.இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு அசட்டுத் துணிச்சல் இருந்தால் தகுதிகாண் பருவத்தில் (Probationary Period) இருந்த நான், ஒரு சக்தி வாய்ந்த முது நிலை மேலாளர் பற்றி, அவரது நேர்மையை சந்தேகித்து கடிதம் எழுதி இருக்கிறேன். வங்கி நினைத்தால் அந்த தகுதிகாண் பருவத்தில் என்னை பணி நீக்கவும் முடியும்.ஆனால் நான் செய்வது சரி என்பதால் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அந்த காரியத்தை செய்தேன் என நினைக்கிறேன்.

அதற்கு பிறகு தினம் எனது கடிதத்தில் எழுதியிருந்தது பற்றி எனக்கோ அல்லது மேலாளருக்கோ கடிதம் வரும் எண்ணி காத்திருந்தேன். ஆனால் எதுவும் வரவில்லை. ஏன் தலைமை அலுவகத்தில் எந்த
நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒருவேளை பயிற்சி காலத்தில் சொல்வதெல்லாம், வெறும் ஏட்டுச்சுரைக்காய் தான் போலும் என நினைத்துக்கொண்டேன். 
 
அது அப்படியே இருக்க, அந்த நாளுக்குப் பிறகு மேலாளரின்
பார்வைஎன் மேல் அதிகம் விழத் தொடங்கியுள்ளது என்பதை பின் 
நடந்த நிகழ்வு ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன்.

ஒருநாள்  வங்கியில் இருக்கும்போது காலை 11 மணிக்கு The Madras Agricultural Journal என்ற இதழ் அஞ்சலில் என் பெயருக்கு வந்தது.அதைப் பிரித்து பார்த்தபோது, வேளாண் ஆராய்ச்சி நிலையம் புதிதாக கண்டுபிடித்திருந்த மல்லிகை பற்றிய சாகுபடிக் குறிப்பு ஒன்று அதில் வெளியாகி இருந்தது. அதை படிக்க ஆரம்பித்தேன்.

புதிய வேளாண் தொழில் நுட்பங்களை, களப் பணியார்களான என்னைப் போன்றவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக எங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்தே அவைகளை வெளியிடும் ஆய்விதழ்களுக்கு (Journals) எங்கள் பெயர்களிலேயே சந்தா கட்டியிருந்தார்கள்.

அப்படி சந்தா கட்டப்பட்ட ஆய்விதழில் ஒன்றுதான் கோவை வேளாண்மைக் கல்லூரியிலிருந்து (அப்போது பல்கலைக் கழகமாக 
அது ஆக்கப்படவில்லை) வெளி வந்த வெளி வந்த The Madras Agricultural Journal.

நான் அதை படித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து, என் இடத்திற்கு மேலாளர் கோபமாக வந்தார்.

தொடரும்

19 கருத்துகள்:

 1. வங்கியில் பெற்ற அனுபவங்கள் என்பது அப்படியே எழுதிக் கொண்டுடே போகலாம் ஐயா....

  இதுவும் எமக்கொரு படிப்பினையே...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

  பதிலளிநீக்கு
 2. மம்ம்... இப்படியும் சிலர். தெரிந்தே ஏமாற்றுவதை அனுமதிப்பவர்கள். என்ன சொல்ல... பணி நேரத்தில் பத்திரிகையை ஏன் படிக்கிறாய் என்று கோபப்பட்டிருப்பார் என்பது யூகம். தொடர்ந்து வந்து தெரிந்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ம.தி.சுதா அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி திரு பாலா கணேஷ் அவர்களே! எழுத்தாளர்
  அல்லவா? சரியாய் ஊகித்திருக்கிறீர்கள்.நான் என்ன செய்தேன் என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் அனுபவமு மிகவும் சுவையாக உள்ளது! தொடர ஆசை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. இந்தப் பதிவையும் அதன் சுவையினால் இந்த இறுதி 3 இடுகையையும் திரும்ப வாசித்தேன். துர் பிரயோகங்களும், ஏமாற்று, திருட்டும் மாற்ற முடியாத
  காலகாலத் தவறுகள் தான். எழுதுங்கள் தொடருவேன்
  மிக நன்றாக விறு விறுப்பாகவும் உள்ளது.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 8. நான் விரும்பிப் படிக்கும் சுவாரசியமான தொடர்.பாஸ்களின் முகங்களை தோலுரித்துக் காட்டுகிறீர்கள். தான் சொல்வதை எந்தவித மறுப்பும் இன்றி கேட்டு நடக்கவேண்டும் என்றே மேலதிகாரிகள் விரும்புகின்றனர்.தன கீழ் பணியாற்றுபவர்கள் திறமையானவர்களாக இருந்தால் அவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 10. முதல் வருகைக்கும் பதிவுக்கு காட்டும் ஆர்வத்திற்கும் நன்றி திரு இளங்கோ அவர்களே! அடுத்த பதிவு இன்னும் ஓரிரு நாட்களில்!

  தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது எனக் கேட்டிருந்தீர்கள்.கீழே கொடுத்துள்ள கூகிளின் இணைப்புக்கு சென்று நீங்கள் எழுத நினைத்ததை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அது தமிழாக மாறும்.உதாரணமாக அம்மா என்பதற்கு Amma என தட்டச்சு செய்தால் அது தமிழில் வந்துவிடும். பிறகு அதை நகல்(Copy) எடுத்து நீங்கள் பின்னூட்டம் எழுதவிரும்பும் பதிவில் அதை Paste செய்துவிடலாம்.

  இணைப்பு : http://www.google.co.in/transliterate/indic/Tamil

  இல்லாவிடில் திரு சூர்யா கண்ணன் அவர்களின் வலைப்பதிவில் டிசம்பர் 16 2010 ல் அவர் எழுதியுள்ள கீழ்க்கண்ட பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  http://www.suryakannan.in/2010/12/microsoft.html

  அதில் குறிப்பிட்டுள்ள Microsoft Indic Language Input Tool ஐ பதிவிறக்கம் (Download) செய்து உங்கள் கணினியில் நிறுவி,நீங்கள் விரும்பும்போது தமிழில் தட்டச்சு செய்து பின்னூட்டம் இடலாம்.

  எனக்குத் தெரிந்ததை எழுதியுள்ளேன்.உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. Either you fight or accept the situation. Doesn’t matter you win or loose. If not, one has to go through, hell a lot of stress. Waiting to see which stand you took.

  Packirisamy N

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N பக்கிரிசாமி அவர்களே! போராடி வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை என்பதை மாநில அரசின் பணியில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டதால்,கடைசிவரை நான் எடுத்த நிலைப்பாட்டின் மேல் போராடி வெற்றிபெற்றேன் என்பதுதான் உண்மை.பதிவைத் தொடர்வதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 15. என்னதான் தாங்கள் செய்ததே சரி என்று எனக்குப் பட்டாலும், Probationary Period இல் இருந்த தாங்கள் இதுபோலெல்லாம் அவசரப்பட்டு செய்திருக்க வேண்டாமோ என்பது என் எண்ணம்.

  ஏனெனில் மேலேயுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாகவும், கூட்டுக்கொள்ளையடிப்பவர்களாகவும் இருந்து விட்டால் .... நம்மை நன்கு பழி வாங்கிவிடக்கூடும்.

  இதனால் பணி நீக்கம் போன்ற தொல்லைகளால், பிறகு மிகவும் பாதிக்கப்படப்போவது நாம் மட்டுமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!. எனக்கு ஏற்பட்ட கோபத்தில் பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் உடனே தலைமை அலுவலகத்திற்கு அஞ்சல் எழுதிவிட்டேன். பின்னர் வருவது வரட்டும் என எண்ணி காத்திருந்தேன்.

   நீக்கு